"கனியாமூரில் திட்டமிட்டு வன்முறை".. ஆதாரங்களை திரட்டியது தடயவியல் துறை..!

0 3012

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி வளாகத்தில் டிரோனை பறக்கவிட்டு ஆய்வு நடத்திய தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியதற்கான கூடுதல் ஆதாரங்களை கைப்பற்றி உள்ளதாக கூறியுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு கூறாய்வு உயர்நீதிமன்றம் நியமித்த மருத்துவக் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், தங்கள் தரப்பு மருத்துவரையும் அக்குழுவில் சேர்க்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், மறு உடற்கூறாய்வு குறித்த தகவல் உரிய நேரத்தில் மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் நியமித்த மருத்துவர்களை எப்படி குறைகூற முடியும்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அரசின் வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இது குறித்து உயர்நீதிமன்றத்தை அணுகவும் மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய மாணவியின் தந்தை தரப்புக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவை மீறி தங்கள் தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, வழக்கை நாளை காலைக்கு தள்ளிவைத்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலினை செய்யப்போவதில்லை என குறிப்பிட்டது.

இதனிடையே, பாதுகாப்பு பணிக்காக மாணவின் உடல் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக வஜ்ரா வாகனங்கள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில குழந்தை பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சி வந்தனர். பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், மாணவி தங்கி இருந்த பள்ளியின் விடுதி அனுமதி இல்லாமல் இயங்கியதாக கூறினர்.

கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கலவரம் நடந்த பள்ளி வளாகம் முழுவதும் டிரோனை பறக்கவிட்டு அதன் காட்சிகளை புலனாய்வுக் குழுவினர் பதிவு செய்தனர். வாகனங்கள், ஆவணங்களுக்கு தீ வைக்க பயன்படுத்தப்பட்ட தீப்பந்தம், இரண்டு கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை தடயவியல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments